ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என மத்திய அரசு செயல்படுகிறது என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி அவை குழு தலைவர்கள் கூட்டத்தில், கொடுக்கப்பட்ட கோப்புகள் அனைத்தும் இந்தியில் இருந்தது தொடர்பாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், “நேற்று முன்தினம் கொரோனா தொடர்பாக இரண்டு அவைகளின் கட்சி குழு தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி தலைமையில் விளக்கம் கொடுத்தார்கள். அப்போது, இந்தி மொழியில் மட்டுமே உள்ள ஒரு கோப்பு கொடுக்கப்பட்டது. ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழியாக உள்ள இந்தியாவில் இது ஏன்? இது ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியா ? இந்தியில் மட்டும் விவரங்கள் இடம் பெற்று இருந்தது ஏன் கேள்வி எழுப்பினேன். இந்த விவகாரத்தை சரிசெய்வதாக துணை குடியரசுத் தலைவர் உறுதி அளித்து உள்ளார். ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என மத்திய அரசு செயல்படுகிறது. ஆட்சி மொழியில் உள்ள ஆங்கிலத்தையும் அழிக்க கூடிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது ” என குற்றச்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து “வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிற்கும் விவசாயிகள் ஆதரவாகவும், பெகாசஸ் விவகாரம் , விலைவாசி உயர்வு குறித்து என எதை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு பேச தயாராக இல்லை. நாடாளுமன்ற அவைகளை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும், ஆனால், அந்த சட்டத.தை மக்களே எதிர்க்கிறார்கள் என்றால் அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஆனால் அதை செய்ய மத்திய அரசு மறுக்கிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.








