முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்துள்ள நிலையில் அவர் மாற்றப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று சந்தித்தார். இதனிடையே, பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்றும் அதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்குப் பதில் மத்திய அமைச்சராக இருந்து அண்மையில் பதவி விலகிய ரவிசங்கர் பிரசாத் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆலோசித்தே, புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பது, ஆளுநர் மாற்றம் பற்றிய யூகங்களை எழுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அது உண்மையானால், புதிய ஆளுநர் நியமனம் பற்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்பே நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதுதான் கூட்டாட்சி தத்துவம் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

யார் இந்த ரவிசங்கர் பிரசாத்?

ரவி சங்கர் பிரசாத் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தந்தையைப் பின்பற்றி ரவிசங்கர் பிரசாத்தும் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் ரவிசங்கர் உள்ளார். இந்திரா காந்தி அரசுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் மேற்கொண்ட இயக்கத்தின் வாயிலாக மாணவர் பருவத்திலயே 1970களில் அரசியலுக்கு வந்தார்.பாஜகவில் மாநில அளவில் பல பொறுப்புகளை வகித்து வந்த ரவி சங்கர் பிரசாத் 1995ம் ஆண்டில் பாஜக தேசிய நிர்வாக கமிட்டியில் உறுப்பினர் ஆனார். 2000ம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2006ம் ஆண்டு மாநிலங்களவைக்கு இரண்டாம் முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010ம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார், பாஜகவின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் இருந்தார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனார். மோடி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ரவி சங்கர் பிரசாத் சில தினங்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement:
SHARE

Related posts

’இதெல்லாம் சகஜம், கவலைய விடு’: நெய்மருக்கு ஆறுதல் கூறும் ’நண்பேன்டா’ மெஸ்சி

Ezhilarasan

ஸ்டாலின் முதல்வராக வேண்டி கைவிரலை துண்டித்த நபர்!

Halley karthi

10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும் பேட்டரி: எலக்ட்ரிக் வாகனங்களின் யுகம் தொடக்கம்?

Arun