சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் லிங்க்டு இன் வலைத்தளங்களை குறிப்பிட்ட அவர், “இந்தியாவில் கோடான கோடி மக்கள் உங்கள் செயலியை பயன்படுத்துகின்றனர். நீங்கள் இங்கே தொழில் செய்து வருவாய் ஈட்டலாம் ஆனால் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு தொழில் செய்வது கட்டாயம்” என்று தெரிவித்தார்.
“நாங்கள் சமூக வலைத்தளங்களை மிகவும் மதிக்கிறோம். சாதாரண ஓர் மனிதனுக்கு உலகச் செய்திகளை எளிமையான முறையில் கிடைக்கும் வகையில் செயல்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு சமூக வலைத்தளங்களின் பங்கு மிகவும் மகத்தானது. ஆனால், தவறான தகவல்களை பரப்பினாலோ அல்லது மக்களை தூண்டி விடும் வகையில் கருத்துகளை பதிவு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மத்திய அரசின் அழுத்தத்திற்கு ஏற்ப ட்விட்டர் நிறுவனம் விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்ட பல இந்தியர்களின் கணக்குகளை முடக்கியதும், பின்னர் இந்தியாவின் சட்டங்கள் சீரற்றது என விமர்சித்ததும் குறிப்பிட்டத்தக்கது.







