பரமக்குடி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தவறான ஊசி செலுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அருங்குளத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன் மனைவி பாக்கியலட்சுமி (41). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பாக்கியலட்சுமிக்கு கடந்த ஆறு மாதங்களாக வயிற்றில் நீர்க்கட்டி பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக பரமக்குடியில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று அறுவை சிகிச்சைக்காக பாக்கியலட்சுமி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, செவிலியர்கள் மயக்க ஊசியை செலுத்துவதற்காக பாக்கியலட்சுமியின் கையில் மருந்தை செலுத்தினர். மருந்து செலுத்திய 5 நிமிடங்களிலேயே அவர் உடல் முழுவதும் கருப்பாக மாறி வாயில் நுரை வந்து இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்பு மருத்துவர் செல்வா என்பர் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாக்யலட்சுமியின் உடலை அவசரமாக கொண்டு சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாக்கியலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதனால் மீண்டும் உடலை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவனைக்கு கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து பாக்கியலட்சுமி கணவர் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் செல்வா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







