தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். முன்னதாக அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்தது.
இதனால் ராமதாஸ் தரப்பு, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது தனித்து களம் காணுமா என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.
இந்த சூழலில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சசிகலாவால் புதிதாக தொடங்கப்பட்ட அஇபுதமமுக-உடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார்.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 101 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அந்த அறிக்கையில் மருத்துவம், வேளாண்மை, நீதித்துறை, காவல்துறை, நீர்வளம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 75 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், அரசியல் பிரிவு தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் ”ஒவ்வொரு தனி மனித வளர்ச்சியும், ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வும் நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.
தமிழக மக்களுக்காக நான் பாடுபடுகிறேன். என் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இதேப்போல் எங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமைக் கட்சிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாக அமையும்” என்றார்.







