ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.
5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மிசோரம், தெலங்கானாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தல் பேரணியில் நாளை ஈடுபட உள்ளார்.
இந்த தேர்தலில் பேரணியில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் குறித்து கட்சியின் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் பேரணியில் பிரியங்கா காந்தி உரையாற்றுவார் என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஏஐசிசி பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, முதலமைச்சர் அசோக் கெலாட், பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







