தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, வேட்புமனு தாக்கல் கடந்த பிப்.26-ம் தேதி தொடங்கியது. திமுக கூட்டணியில், திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை. பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ப.சுவாமிநாதன் உள்ளிட்ட 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில், டாக்டர் அன்புமணி, கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், மு.தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனைய சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இனையடுத்து வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் என 6 பேரைத்தவிர வேறு யாரும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாததால், மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.







