கச்சா எண்ணெய் விலை உயர்வு : இந்தியாவில் விலைவாசி உயருமா ? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்…..!

கச்சா எண்ணெய் விலை உயர்வானது இப்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வில் மக்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜியா.உர். ரகுமான்கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் விலைவாசி உயருமா ? என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”கடந்த ஓராண்டாகக் குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை, பிப்ரவரி 28, 2026 அன்று மேற்கு ஆசியாவில் தொடங்கிய போர் காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் $69.01 ஆக இருந்தது. ஆனால் மார்ச் 2-ம் தேதி: இது $80.16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போதைய பணவீக்கம் மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதால், இந்த விலை உயர்வு இப்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ரிசர்வ் வங்கியின் அக்டோபர் 2025 அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்தால், அது பணவீக்கத்தில் 0.30% அளவுக்கே மாற்றத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக அமைச்சர் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்தார்.

அதன்படி சில்லறை ”பணவீக்கமானது  2023 -25 ம் ஆண்டில் : 5.4%, 2024 -25ம் ஆண்டில் : 4.6%, 2025 – 26 (ஏப்ரல்-ஜனவரி): 1.8% ஆகும்” என்றார்.

மேலும் அவர் “ஜனவரி 2026-ல் பணவீக்கம் 2.75% என்ற அளவிலேயே உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கிற்கு உள்ளாகவே (4% ± 2%) உள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி 2025 முதல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) வட்டி விகிதத்தை 1.25% குறைத்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை அதிகரித்தல், சந்தையில் தானியங்களை விற்பனை செய்தல் மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் போது ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்தல். மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ‘பாரத்’ பிராண்ட் பெயரில் சில்லறை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.