தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் திமுக 2, காங்கிரஸ் 1, தேமுதிக 1 இடங்களில் போட்டியிடுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் அதிமுக 1, பாமக 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக பாமக தலைவர் அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து தம்பிதுரையும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், சவுமியா அன்புமணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.







