மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!

மாநிலங்களவை தேர்தலுக்காக தி​முக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்ள வேட்​பாளர்​ மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது அப்​துல்​லா, அன்​புமணி மற்​றும் சந்​திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் வரும் ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்​து, காலி​யாக உள்ள 6 இடங்​களுக்​கான தேர்​தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் பலம் அடிப்​படை​யில் 6 இடங்​களில் 4 திமுக​வுக்​கும், இரண்டு அதி​முக​வுக்​கும் கிடைக்​கும். அதன் அடிப்​படை​யில், திமுக சார்​பில் 4 இடங்​களுக்கு மக்​கள் நீதி மய்​யம் கட்​சித்தலை​வர் கமல்​ஹாசன், பி.​வில்​சன், கவிஞர் சல்​மா, சிவலிங்​கம் ஆகியோர் அறிவிக்​கப்பட்டுள்​ளனர்.

அதி​முக சார்​பில், தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்​புமனுத்​தாக்​கல் தொடங்​கியது. வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்​தாக்​கல் செய்​ய​லாம். முதல் நாளில், 2 சுயேச்​சைகள் மனுத்​தாக்​கல் செய்​தனர். அதன்​பின் கடந்த இரு தினங்​களாக யாரும் மனுத்​தாக்​கல் செய்​ய​வில்​லை. இந்​த நிலை​யில், தி​முக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்ள வேட்​பாளர்​ மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு, நமது தலைவர் கமல் ஹாசன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவை நாளை (06-06-2025 வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவிருக்கிறது”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.