முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

திரையுலகில் ரஜினியை வார்த்தெடுத்த 12 படங்கள்


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

திரையுலகில் 47 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மூன்றெழுத்து மந்திரம் ரஜினி. திரையுலகின் முடிசூடா மன்னனாக வசூல்சக்ரவர்த்தியாக தலைமுறைகள் கடந்து தன்னை நிரூபித்துக்காட்டிய ரஜினிகாந்த், 70 வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்குகிறார். ஸ்டைல் மன்னனாக தமிழ் சினிமாவின் வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்ற அதே ரஜினிதான் முள்ளும் மலரும் போன்ற காலத்தால் அழியாத காவியப்படங்களிலும் கதைநாயகனாக வலம் வந்துள்ளார். டிசம்பர் 12ந்தேதி பிறந்தவர் ரஜினிகாந்த்.  அவரை சூப்பர் ஸ்டாராகவும், சிறந்த நடிகராகவும் வார்த்தெடுத்த 12 படங்கள் குறித்த ஒரு தொகுப்பைத் தற்போது காண்போம். 

அபூர்வராகங்கள்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரஜினி என்கிற கறுப்பு வைரத்தை ”அபூர்வராகங்கள்” என்கிற நகைப்பெட்டியில் வைத்துதான் தமிழ் சினிமாவிற்கு பரிசாக அளித்தார் கே.பாலச்சந்தர். சிவாஜிராவை ரஜினிகாந்தாக மாற்றிய இந்த திரைப்படம்தான் ரஜினி-கமல் என்கிற சகாப்தத்தின் தொடக்கப்புள்ளி. தமிழ் சினிமா தனக்காக போட்டுவைத்திருக்கும் ராஜபாட்டையின் கேட்டை திறந்துகொண்டு இந்த படத்தின் மூலம்தான் உள்ளே நுழைந்தார் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான இந்த படம் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி வெளியானது.

மூன்று முடிச்சு

அதுவரை வில்லன்கள் திரையில் தோன்றுபோது திட்டுக்களும், ஏச்சுக்களும்தான் திரையரங்குகளை நிரப்பிவந்தன. ஆனால் இந்த படத்தில் வில்லன் தோன்றுபோது விசில் பறந்தது. கைத்தட்டல்கள் காதைப் பிளந்தன. ஸ்டைல் என்கிற முடிச்சை தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போட்ட படம்தான் ”மூன்று முடிச்சு”. ரஜினியின் சிகரெட் ஸ்டைல் பாப்புலரானது இந்த படத்திலிருந்துதான். கறுப்பு வெள்ளை காலத்தில் வெளிவந்த இந்த படத்தை இப்போது பார்த்தாலும் ரஜினியின் நடிப்பு நவீனமாகத் தெரியும். ரஜினி என்கிற காந்தம் இளைஞர் பட்டாளத்தை கூட்டம் கூட்டமாக ஈர்க்கத் தொடங்கியது இந்தப் படத்திலிருந்துதான். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படம் 1976ம் அக்டோபர் 22ந்தேதி வெளியானது.

பைரவி

ரஜினிகாந்தை முதல் முதலாக கதாநாயகனாக்கியது இந்த படம். ”ஒரு காரை ஸ்டார்ட் செய்வதில் இத்தனை ஸ்டைலா” என ”ஆறுபுஷ்பங்கள்” படத்தின்போதே ரஜினியை பார்த்து அசந்த கதாசிரியர் கலைஞானம், தாம் படம் எடுத்தால் இவரைத்தான் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அப்போது பரபரப்பான வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை கதாநாயகனாக்க பல எதிர்ப்புகள் கிளம்பியது. கதாநாயகனாக நடிக்க ரஜினியே தயங்கினார். இருந்தும் தனது முடிவில் உறுதியாக இருந்து அவரை  ஹீரோவாக்கினார் கலைஞானம்.  இந்த படத்திலிருந்துதான் சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழி ரஜினிகாந்தின் பெயருக்கு முன்னாள் சேர்ந்தது. கலைப்புலி எஸ்.தாணுதான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை வழங்கினார்.  வில்லனாக நடித்துக்கொண்டிருந்தபோதே கதாநாயகனை மிஞ்சும் அளவிற்கு ரஜினி பிரபலமாகியிருந்ததால் ஹீரோவாக முதல் படத்திலேயே ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் போடப்பட்டது பொருத்தமாகவே இருந்தது. அந்த பட்டத்தை வைத்து அழைத்து அவரை ரசிகர்கள் கொண்டாடினர். எம்.பாஸ்கர் இயக்கிய இந்த திரைப்படம் 1978ம் ஆண்டு ஜூன் 8ந்தேதி வெளியானது.

முள்ளும் மலரும்

”ரஜினி ஓடி வருகின்ற நதி, எங்கே அணை போட்டாலும் நிற்பார், எங்கே திறந்துவிட்டாலும் ஓடுவார். ஆனால் அவரை ஒரே கண்ணோட்டத்திலேயே பயன்படுத்துகிறார்கள்” ரஜினிக்குள் இருக்கிற நடிப்பாற்றலை மனதில் வைத்து இயக்குநர் விசு இப்படி கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் யதார்த்த சினிமாக்களுக்கு புதிய அர்த்தம் கொடுத்தவர், மசாலா சினிமாக்களை அடியோடு வெறுத்தவர் என அறியப்படும் மகேந்திரன் இயக்கிய முதல் படத்தின் கதைநாயகனாக வாழ்ந்தவர் ரஜினிகாந்த். அவரை ஒப்பந்த செய்யவில்லை என்றால் எனக்கு இந்த படமே வேண்டாம் என்று முள்ளும் மலரும் படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் திட்டவட்டமாக கூறினார் மகேந்திரன். அந்த அளவிற்கு ரஜினியின் யதார்த்த நடிப்பு மீது நம்பிக்கை வைத்திருந்தார் அவர். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதுபோல் முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பு பேசப்பட்டது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.   பாட்ஷாவில் எனக்கு இன்னொரு பெயர்  இருக்கு என ரஜினி கூறுவதுபோல் திரையுலகில் ரஜினியின் இன்னொரு முகத்தை காட்டியபடம் ”முள்ளும் மலரும்”. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று இந்த படம் வெளியானது.  யதார்த்த சினிமாவான இந்த படத்தில் இடம்பெறும் ஒரு வசனம்தான் ரஜினியின் மாஸ் டயலாக்குகளில் ஒன்றாக தற்போதுவரை தொடர்கிறது. ”கெட்ட பய சார் இந்த காளி” என்கிற அந்த வசனம் தற்போதுவரை பாப்புலர்.

முரட்டுக்காளை

ஏவிஎம் நிறுவனம் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படத் தயாரிப்புக்கு வந்தபோது ரஜினியைத்தான் கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது. அப்போது அந்நிறுவனம் தயாரித்த படம்தான் முரட்டுக்காளை. வசூலில் சக்கைபோடுபோட்ட இந்த படம், ரஜினி படங்களின் வர்த்தக எல்லையை அடுத்தக்கட்டதுக்கு எடுத்துச் சென்றது. முரட்டுக்காளையின் வசூல் சீற்றம் 100 நாட்களை தாண்டியும் தொடர்ந்தது. ரஜினியின் வெற்றிப்படங்களின் வரிசையில் ஒரு மைல் கல்லாக முரட்டுக்காளை அமைந்தது.  பஞ்சு அருணாச்சலம் எழுத்திலும், எஸ்.பி.முத்துராமன் இயக்கியத்திலும் வெளிவந்த இந்த படம் 1980 டிசம்பர் 20ந்தேதி வெளியானது. ரஜினி, எஸ்.பி.முத்துராமன் என்கிற கமர்ஷியல் காம்போவின் பாய்ச்சல் இந்த படத்திலிருந்துதான் தொடங்கியது.

ஆறிலிருந்து அறுபது வரை

ரஜினியின் ஸ்டைலையும், ஆக்ஷனையும் வைத்து பல ஜனரஞ்சகப் படங்களை கொடுத்த எஸ்.பி.முத்துராமன், அந்த பாணியிலிருந்து சற்றுவிலகி ரஜினியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய படம்தான் ”ஆறிலிருந்து அறுபது வரை”. இரண்டு தம்பிகள், தங்கைக்கு அண்ணனாக நடித்திருந்த ரஜினி, இந்த படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.  ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல அவர் யதார்த்த நடிகரும்கூட என நிரூபித்த படங்களில் ஆறிலிருந்து அறுபது வரையும் ஒன்று. பஞ்சு அருணாச்சலம் எழுதி, தயாரித்த இந்த படம் 1979ம் ஆண்டு செப்டம்பர் 14ந்தேதி வெளியானது.

தில்லுமுல்லு

ஆக்ஷன், அதிரடி, ஸ்டைல் என்பதே ரஜினியின் அடையாளமாகிப்போன நேரத்தில் அவருக்கு காமெடியும் வரும் என கே.பாலச்சந்தர் நிரூபித்த படம் தில்லுமுல்லு. தனக்கு காமெடி வருமா என்று சந்தேகத்தில் மிகவும், மிகவும் தயங்கி தயங்கியே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. ஆனால் இந்த படத்திற்கு பின்னர் காமெடியையும் தனது நடிப்பின் ஒரு அம்சமாக எல்லா படங்களிலும் அவர் தொடர்ந்தே வந்தார். ரஜினி, தேங்காய் சீனிவாசன் இணைந்து நடித்த இண்டர்வியூ சீன், தமிழ் சினிமாவின் தலைசிறந்த காட்சிகளில் ஒன்றாக எப்போதும் திகழ்ந்துவருகிறது. விசுவின் திரைக்கதை, வசனத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1981ம் ஆண்டும் மே 1ந்தேதி இந்தப்படம் வெளியானது.

 ஸ்ரீராகவேந்திரர்

ரஜினிகாந்த்தின் 100வது திரைப்படம் ஸ்ரீராகவேந்தர். ரஜினி தனது வழக்கமான பார்முலாவிலிருந்து முற்றிலும் விலகி நடித்த படம் ஸ்ரீராகவேந்தர். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகம் கொண்ட ரஜினி தனது ஆத்ம திருப்திக்காக ஸ்ரீராகவேந்திரர் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காததால் படம் தோல்வி அடைந்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படம் 1985ம் ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி வெளியானது.

பாட்ஷா

ரஜினியின் மாஸ் ஹீரோ பிம்பத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் சென்ற படம்  பாட்ஷா. ரஜினியை சுற்றி அரசியல் பரபரப்புகள் வலுவாக சூழத் தொடங்கியது இந்தப் படத்திலிருந்துதான். ”நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி“ என்று பாட்ஷா படத்தில் ரஜினி பேசிய வசனம் பட்டித்தொட்டியொங்கும் பட்டைய கிளப்பியது. ரஜினியின் சினிமா மார்க்கெட்டை ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் முக்கிய இடத்திற்கு கொண்டு சென்றதில் பாட்ஷா படம் அதிக பங்கு வகித்தது. தமிழ் சினிமா கண்ட இன்டஸ்ட்ரி ஹிட்டில் பாட்ஷா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஜெயலலிதாவுடன் ரஜினிக்கு மோதல் இருந்த காலத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர்.எம்.வீரப்பனின் சத்யா முவீஸ் பாட்ஷா படத்தை தயாரித்ததால் அந்த படத்தை சுற்றி பல்வேறு அரசியல் பரபரப்புகள் எழுந்தன.

படையப்பா

ரஜினியின் திரையுலக பயணம் வெள்ளிவிழா ஆண்டை தொட்ட காலத்தில் வெளிவந்தது இந்த வெள்ளிவிழா படம். தமது திரையுலக வாழ்க்கை இன்னும் 25 ஆண்டுகள் நீடிக்கும் என்பதை உணர்த்துவது போல் படத்தில் ரஜினியின் எனர்ஜி இருந்தது.  படையப்பாவில் இடம்பெற்றிருந்த பல்வேறு மாஸ் சீன்கள் திரையரங்குகளை தெறிவிக்கவிட்டன. ”என் வழி தனி வழி” என்பது உள்பட அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் இன்று வரை ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன.  திரையுலகில் தாம் மிகவும் போற்றும் சிவாஜியுடன் படையப்பா படத்தில் நடித்து மகிழ்ந்தார் ரஜினிகாந்த். முத்து படத்திற்கு பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படம் முத்து படத்தைவிட பெரிய வெற்றி பெற்றது.  அதிக திரையரங்குகளில் வெளியீடு, அதிக வசூல் என அப்போது பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்திருந்தது படையப்பா.

சிவாஜி

தமிழ் சினிமாவில் நீண்ட பாரம்பரியமிக்க ஏ.வி.எம் திரைப்படம் பல வருடங்கள் சினிமா தயாரிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், நீண்ட நாளைக்கு பின்னர் மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கியபோது ரஜினியை வைத்து தயாரித்த பிரம்மாண்ட படம்தான் சிவாஜி. முதல்வன் படத்திலேயே இணைந்திருக்க வேண்டிய ரஜினி- ஷங்கர் கூட்டணி அடுத்தடுத்து தள்ளிப்போய்கொண்டிருந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் அவர்களை இணைத்து வைத்தார். ஒரே திரைப்படம் ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடும் புதிய பார்முலாவை தொடக்கி வைத்தே இந்த படம்தான். வெள்ளிவிழா கொண்டாடிய ”சிவாஜி”  திரைப்படம் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை தாண்டிய முதல் திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

2.o

உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ்படத்தின் கதாநாயகன் என்கிற பெருமையை ரஜினிக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் 2.o. ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம்,  உலக அளவில்  800 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 2.o படம் பாலிவுட்டிலும் பாக்ஸ் ஆபிசில் கலக்கியது. இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை உலகிற்கு எடுத்துக்காட்டிய படங்களில் 2.o படமும் ஒன்றாக விளங்குகிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Halley Karthik

’மெக்சிக்கன் வேவ்ஸ்’ – கால்பந்தின் தவிர்க்க முடியாத அங்கமானது எப்படி?

EZHILARASAN D

அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

Web Editor