நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணி அளவில் சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.
தற்போது, ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு, ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் ரஜினிகாந்த் இன்னும் ஓரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








