வீட்டுப் பாடம் செய்யாத மாணவனை அடித்துக்கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற கோபக்கார ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜுரு மாவட்டத்தில் உள்ளது சலாசர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவரின் 13 வயது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். ஆசிரியர் மனோஜ்குமார் தன்னை காரணமில்லாமல் அடிப்பதாக கடந்த சில நாட்களாக அப்பாவிடம் கூறிவந்தான் மாணவன். ஆனால், அவர் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 9.15 மணிக்கு ஓம்பிரகாஷை சந்தித்த ஆசிரியர் மனோஜ், உங்கள் மகன் சுயநினைவில்லாமல் விழுந்துவிட்டான் என்று கூறியுள்ளார். அடித்து பிடித்து பள்ளிக்குப் போய் பார்த்தால் மகனிடம் பேச்சு மூச்சில்லை.
வீட்டுப் பாடம் செய்யாததால் தான் அடித்தேன் என்றும் அப்போது திடீரென்று விழுந்தான் என்றும் தெரிவித்த ஆசிரியர், இப்போது இறந்தது போல நடிக்கிறான் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவனைத் தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மற்ற மாணவர்கள், சரிமாரியாக ஆசிரியர் தாக்கியதால்தான் மாணவன் இறந்தான் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் அடித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.








