ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி : மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3,613 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்றது. மேலும், மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் நான்கில் பாஜக தெளிவான பெரும்பான்மையை பெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவிற்குப் பிரம்மாண்ட வெற்றியைத் தேடித்தந்த ராஜஸ்தான் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து உண்மை பெற்ற வெற்றிக்கான சான்றாக இது அமைந்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், ‘இரட்டை என்ஜின்’ அரசின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளைத் தாங்கள் முழுமையாக ஆதரிப்பதை இம்மாநிலத்தில் உள்ள எனது குடும்பத்தினர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளனர். இது மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் செழிப்பைக் கொண்டுவருவதற்கான எங்கள் உறுதியையும் வலுப்படுத்தும்.

இந்த தருணத்தில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், அத்துடன் கட்சியின் அர்ப்பணிப்புமிக்க மற்றும் கடின உழைப்பாளிகளான தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.