தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தொழில் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் லண்டன் சென்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் சுற்றுலா சென்றுவிட்டுத் தமிழக மக்களை ஏமாற்றும் வெற்று விளம்பர நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களில் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும்: ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு லண்டனிலிருந்து வெளியிட்டு வரும் செய்திக் குறிப்புகள் அனைத்தும் அப்பட்டமான முரண்பாடுகளும் மர்மங்களும் நிறைந்தவையாகவே உள்ளன.
புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுவிட்டதாகத் தவெக அரசு பெருமை பேசும் பலவும். ஏற்கெனவே பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களின் வழக்கமான விரிவாக்கப் பணிகளே (Brownfield Projects) ஆகும். குறிப்பாக, தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ‘சம்வர்தனா மதர்சன்’ நிறுவனத்தின் செயல்பாடுகளை ரூ.11,000 கோடி புதிய முதலீடு என்றும், திருவள்ளூரில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் வழக்கமான ஆலை விரிவாக்கத்தை ரூ.300 கோடிக்கான ‘வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்’ என்றும் தவெக அரசு கணக்குக் காட்டுவது அப்பட்டமான அரசியல் மோசடியாகும்.
அதேபோல. ஸ்வீடனின் ‘சிக்மா டெக்னாலஜி’ மற்றும் ‘ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனங்கள் மூலம் ரூ.1.000 கோடி முதலீடும் 2,000 புதிய வேலைவாய்ப்புகளும் வரப்போவதாக முதல்வர் ஜோசப் விஜய் பில்டப் கொடுக்கிறார். உண்மை என்னவென்றால், சிக்மா நிறுவனம் ஏற்கெனவே 2026 மார்ச்சில் தமிழகத்தில் தனது மையத்தைத் தொடங்கிவிட்டது; EY நிறுவனமும் தமிழகத்தில் முன்பிருந்தே இயங்கி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களையும், ஆலோசனை வழங்கும் கன்சல்டன்சி நிறுவனத்தையும் வைத்துக்கொண்டு, புதிய முதலீடுகளை ஈர்த்துவிட்டதாகத் தவெக அரசு கதை விடுவது யாரை ஏமாற்ற?
இவை தவிர, ஐரோப்பிய ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.3,000 கோடிக்கு ‘விருப்பக் கடிதம் கொடுத்துள்ளதாகக் கூறும் தவெக அரசு. அந்த நிறுவனத்தின் பெயரைக் கூட வெளிப்படையாக அறிவிக்கத் துணியாமல் மறைப்பது ஏன்? பன்னாட்டு அரங்கில் ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் பெயரைக் கூடச் சொல்ல முடியாத அளவிற்கு முதல்வர் ஜோசப் விஜய் எதை மூடி மறைக்கப் பார்க்கிறார்?
எனவே, முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நடத்தும் இந்த முதலீட்டு நாடகங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, லண்டனில் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களின் உண்மையான பெயர்கள். அதில் புதிய நிறுவனங்கள் எத்தனை. இளைஞர்களுக்குக் கிடைக்கவுள்ள நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் முதல்வரின் இந்த லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்கள் அடங்கிய முழுமையான ‘வெள்ளை அறிக்கை’யைத் தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




