மதக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் விவகாரம் – மத்திய கல்வித்துறைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

குழந்தைகளுக்கு மதக் கல்வி வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் முறைப்படுத்த கோரிய மனு மீது மத்திய கல்வித்துறைச் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

பாஜக உறுப்பினரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், நாட்டில் பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகாரம் இல்லாத பல மதக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், இவை சிறு குழந்தைகளின் மனதில் தவறான கருத்துகளை விதைத்து, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். எனவே, 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய அடிப்படை மற்றும் மதச்சார்பற்ற கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, இத்தகைய நிறுவனங்களைக் கண்காணித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து உரிய முடிவு எடுக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் மத்திய கல்வி அமைச்சகம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்கூறி, மத்திய கல்வித்துறை செயலாளர் டி.கே.அனில்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறியது ஏன் ? என்பது குறித்து விளக்கமளிக்கக் கோரி மத்திய கல்வித்துறைச் செயலாளருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.