ராஜஸ்தானில் இந்திரா காந்தி இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வழங்கினார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மாநில அரசின் லட்சியமான இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் உள்ள பிர்லா ஆடிட்டோரிய அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகச்சியை தொடங்கிவைத்த பின்னர் சில பயனாளிகளுக்கு ஸ்மார்ட்போன்களையும் வழங்கினார். இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் யோஜனாவின் முதல் கட்டத்தை 400 க்கும் மேற்பட்ட மொபைல் விநியோக மையங்களின் உதவியுடன் தொடங்கினார்.
மாநில அரசின் இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1.35 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் இணையம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 40 லட்சம் பெண் பயனாளிகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் டேட்டா இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிம்கள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முகாம்களில் பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்காக, பயனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் சிம்மிற்கான நேரடி பரிமாற்றம் (டிபிடி) மூலம் 6800 ரூபாய் இ-வாலட்டில் டெபாசிட் செய்யப்படும்.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்த பிறகு மேடையில் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது:
தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தனது அரசின் சிறந்த குணம். அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மொபைல் போன்களை வழங்குவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்து, அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளேன். இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முக்கிய வழிமுறையாக மாறும். “அறிவே ஆற்றல். இந்த கருப்பொருளில் தான், பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் முதல் கட்டமாக விதவைகள் மற்றும் ஒற்றைப் பெண்கள் ஓய்வூதியம் பெறுவோர், பெண் குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விநியோக முகாம்களின் போது பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்களை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை நாங்கள் அளித்துள்ளோம். அதற்காக ரூ.6,800 அவர்களின் வங்கிக் கணக்கில் மாநில அரசால் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், 40 லட்சம் பயனாளிகள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRAI) அங்கீகரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடமிருந்து முழுமையான டேட்டா இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிம் கார்டுகளைப் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா










