ராஜஸ்தான் அரசின் ”சுகாதார உரிமைச் சட்டம்” – தனியார் மருத்துவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சுகாதார உரிமை மசோதாவிற்கு அம்மாநில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார உரிமை மசோதா என்றால் என்ன? மருத்துவர்கள் அதனை எதிர்ப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விரிவாக…

ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சுகாதார உரிமை மசோதாவிற்கு அம்மாநில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார உரிமை மசோதா என்றால் என்ன? மருத்துவர்கள் அதனை எதிர்ப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்….

சுகாதார உரிமை மசோதா

இந்தியாவில் முதன்முதலாக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் ‘சுகாதார உரிமை மசோதா’ கடந்த மார்ச் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் அனைத்து பொது சுகாதார வசதிகளையும் இலவசமாக பெற முடியும். அரசு, சில தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் சேவையை இலவசமாக பெற இந்த சட்டம் வழிவகுக்கிறது.

இந்த மசோதாவின்படி, அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் ஆலோசனை, மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெற முடியும். மேலும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம். மேலும், அவசர காலங்களில் எவ்வித முன் கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற மக்களுக்கு உரிமை அளிக்கிறது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, சட்டப்பிரிவு 47-யின் படி (ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை) சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனியார் மருத்துவர்கள் எதிர்க்க காரணம் என்ன? 

இலவச சிகிச்சைக்கான உரிய தொகையை அரசு வழங்க வேண்டும். ஆனால் அது குறித்து சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அவசர சிகிச்சைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரசவத்தை நீக்க வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள 50 படுக்கை வசதிகளுக்குக் குறையாத மருத்துவமனைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சுகாதார ஆணையத்தின் கீழ் இந்தச் சட்டம் கண்காணிக்கப்படுவதால் அரசின் தலையீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற காரணங்களாலேயே தனியார் மருத்துவர்கள் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வலுக்கும் ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் மருந்துவமனை மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பையிலும் தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சைக்கான செலவு, பரிசோதனைகள், உட்கட்டமைப்பு பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டவற்றிற்கான தொகையை யார் செலுத்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் கூறுவது என்ன?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் நலன் கருதியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் குறித்த தவறான புரிதல்கள் தீர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.