ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், சிஎஸ்கே-ஐ வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், 16வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் அடித்தார்.
இதையும் படியுங்கள் : NCL 2023: திருச்சி எம்.ஏ.எம் இன்ஜினியரிங் கல்லூரி பங்கேற்காததால் ஜேஜே இன்ஜினியரிங் காலேஜ் அணிக்கு இரண்டு புள்ளிகள்
இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கம் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் அடித்து விளையாட, சிஎஸ்கே வீரர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இறுதி ஓவரில், 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் நின்ற ராகுல் தெவாட்டியா, ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, குஜராத் அணி வெற்றியை தட்டிச் சென்றது. 182 ரன்கள் எடுத்த குஜராத் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.







