முதலமைச்சர் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுடால் பேசி கொண்டு இருப்பை காட்டி கொள்கின்றனர் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவுகள் பெரியாறு அணை இன்று திறக்கப்பட்டது. முழு கொள்ளளவான 47 அடியில் 45 அடி நிரம்பி உள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள வேளாண் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன், பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், இன்று முதல் வரும் 28ம் தேதி வரை நாள்தோறும் 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும். மழையின் அளவை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்க பரிசீலனை செய்யப்படும். தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும்,பெரியாறு பிரதானக்கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும்.

தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் மழையினால், காற்றினால் ஏற்படப்போகும் இடையூறுகளை முன்னரே அறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில், கடந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இல்லாத வகையிலும் தண்ணீர் தேங்காமலும் முதலமைச்சர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்திற்கு, கடந்த 10 வருடமாக அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்திருந்தால் கடந்த முறை பெய்த மழையில் தண்ணீர் தேங்கி இருக்காது. அவர்கள் சவுடால் பேசிக்கொண்டு இருப்பை காட்டிக் கொள்கிறார்களே தவிர உண்மை நிலவரத்தை கூற அவர்கள் தயாராக இல்லை. முதலமைச்சர் கமிட்டி அமைத்து சாமர்த்தியமான பணிகள் செய்ததால் தான் தற்போது வெற்றிகரமாக மழைநீர் தேங்காமல் உள்ளது என்று கூறினார்.







