கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மகேஷ் நியூஸ்7 தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில்,
நாளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மதியம் இரண்டு மணி அளவில் நாகர்கோவிலில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் நாகர்கோவில் மாநகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அவரது வருகையின் போது மாவட்டத்தில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு கோரப்பட்டு உள்ளதாகவும் மகேஷ் குறிப்பிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அரசினர் விருந்தினர் மாளிகையில் தூய்மைப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.







