தந்தையின் கொலைக்கு பழி வாங்குவதற்காக, பணம் சேர்ப்பதற்கு வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த நாராயணபிள்ளை என்ற முதியவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி, அவரிடமிருந்த 550 ரூபாயை பறித்து சென்றனர். அந்த முதியவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திற்பரப்பு அருவி பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், நெல்லை மாவட்டம் கிருஷ்ணபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த ரசூல் என்ற முத்தையா, செய்யது என்ற மாயாண்டி என்பதும், சகோதரர்களான இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர்களது தந்தை பீர்முகமது என்ற அய்யாதுரை, மற்றும் இவர்களின் அண்ணனான கோதா என்ற சரவணன் ஆகியோரை கடந்த ஆண்டு சிலர் கொலை செய்தனர்.
இதில் தொடர்புடையவர்கள் பாளையங்கோட்டை சிறையில் இருப்பதாக தெரிகிறது. எனவே, அவர்களை பழி தீர்ப்பதற்கு பணம் திரட்டுவதற்கு, இருவரும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.







