இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை மேகங்களால் கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சூரிய ஒளியில் இருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும்போது இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது, சந்திரன் முழுமையாக மறைக்கப்படும் பட்சத்தில் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அந்த வகையில், இந்திய நேரப்படி, இன்று மதியம் 2 மணி 39 நிமிடத்திற்கு தொடங்கி மாலை 6 மணி 19 நிமிடத்திற்கு சந்திர கிரகணம் நிறைவடைந்தது. பகுதி நேர சந்திரகிரகணம் மதியம் 2.39 மணிக்கு தொடங்கியது. முழு கிரகணம் 3.46 மணிக்கு தொடங்கி 5.12 மணிக்கு நிறைவடைந்தது. சென்னையை பொறுத்தவரை சந்திரன் உதயத்தின்போது முழு சந்திர கிரகணமும், அது முடிந்த பிறகு பகுதி நேர கிரகணமும் நிகழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பகுதி நேர சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி நிகழும் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சென்னையில் மழை பொழிவு இருந்ததால் சந்திர கிரகணம் தெரியவில்லை என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை 5.40 மணி அளவில் பகுதி நேர சந்திர கிரகணம் என தெரியும் என எதிர்பார்த்தோம். ஆனால் மழையால் சந்திர கிரகணம் தெரியவில்லை என்றார்.
கொடைக்கானலில் வான இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் சந்திர கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மேக மூட்டங்கள் சந்திர கிரகணத்தை முழுமையாக மறைத்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பாரம்பரிய வழக்கப்படி வெண்கல பாத்திரத்தில் உலக்கை வைத்து கிராம மக்கள் கிரகணத்தை உணர்ந்தனர். இதேபோல், அமெரிக்கா, ஹவாய் தீவு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் கிரகணம் தென்பட்டது.









