Rain Alert | காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (13-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.