மகளிர் பிரீமியர் லீக் | உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு!

9 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடர்ந்து, லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்னிலும், கிரன் 5 ரன்னிலும், ஷிராவத் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. டெண்ட்ரா 40 ரன்னிலும், தீப்தி 45 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் சரங்கா , நடினி டி கிலெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெள்ளி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் 85 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 12.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்த பெங்களூரு அணி 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. மந்தனா 47(32) ரன்களிலும் ரிச்சா கோஷ் 4(2) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் ஷிகா பாண்டே 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.