காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான., ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் உதகை வரவுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு, மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மீண்டும் எம்.பியான ராகுல்காந்தி, மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில் 12, 13 ஆகிய தேதிகளில் 2 நாள் பயணமாக தமது வயநாடு தொகுதிக்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் காந்தி நாளை காலை 11 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லவுள்ளார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி மதிய உணவுக்கு பின், 1 மணி அளவில் உதகை அருகே முத்தநாடு மந்து எனும் தோடர் பழங்குடி கிராமத்துக்கு சென்று அம்மக்களோடு கலந்துரையாடிய பின், கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.
இந்த பயணத்தின் போது ‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல்காந்தியின் வருகையையொட்டி, கோவை மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தி வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







