அமலாக்கத்துறை நாளை தன்னிடம் நடத்த திட்டமிட்டுள்ள விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் சோனியா காந்தியை பார்க்க உள்ளதால் இன்று ஒரு நாள் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், நாளை நடத்த திட்டமிட்டுள்ள விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்குமாறு அமலாக்கத்துறையை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
75 வயதாகும் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, அவரது மகள் பிரியங்கா காந்தி உடன் இருந்து பார்த்து வருகிறார்.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
யங் இந்தியா எனும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கும் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும், நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிட். எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.