காவல் நிலையத்திற்குள் எஸ்எஸ்ஐ உயிரிழக்க முயற்சி

  நாமக்கல் அருகே காவல் நிலையத்திற்குள்ளேயே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். பணிச்சுமையால் அவர் உயிரிழப்புக்கு முயன்றாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரை…

 

நாமக்கல் அருகே காவல் நிலையத்திற்குள்ளேயே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். பணிச்சுமையால் அவர் உயிரிழப்புக்கு முயன்றாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் நீலகண்டன்
(50). இவர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக
கடந்த ஓரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் வழக்கம் போல் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்த நீலகண்டன், காவல் நிலையத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்த விஷ மருந்தினை அருந்தி உயிரிழக்க முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனை பார்த்த சக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உடனடியாக மீட்டு அருகில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்திட நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில்,  பரமத்திவேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்,  ராஜா ரண வீரன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.  நீலகண்டன் பணிச் சுமை காரணமாக உயிரிழப்புக்கு முயன்றாரா அல்லது குடும்ப பிரச்சனைகள் அவரை உயிரிழப்புக்கு தூண்டியதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவல் நிலையத்திற்கு உள்ளேயே விஷம் அருந்தி உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம். போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.