ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பேராசிரியர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழ் உதவியோடு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மாற்றுத்திறனாளியான அண்ணாமலை, ராகுல் காந்தி மீது கொண்ட ஈர்ப்பால் அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தார்.
இதற்காக கோவையில் இருந்து புறப்பட்டு நெல்லை வந்த அவர், ராகுல்காந்தி தங்கியிருந்த விடுதியின் முன்பு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். அவர் ராகுல் காந்தியை சந்திக்க பல்வேறு தரப்பில் முயற்சிகள் எடுத்தும் முடியாமல்போனது.
இதையடுத்து பேராசிரியர் அண்ணாமலை, ராகுல் காந்தியை சந்திப்பதற்காக நியூஸ் 7 தமிழின் உதவியை நாடினார். அதன்படி நமது மண்டல செய்தியாளர் சுடலைகுமார், பேராசிரியர் அண்ணாமலையின் புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை ராகுல் காந்திக்கு ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தினார். இதன் எதிரொலியாக ராகுல் காந்தியின் உதவியாளர்கள், பேராசிரியர் அண்ணாமலையின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.
அப்போது இன்று காலை 8 மணிக்கு ராகுல் காந்தி சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியுள்ளதாக பேராசிரியர் அண்ணாமலையிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதுபோலவே நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தி மாற்றுதிறனாளி பேராசிரியர் அண்ணாமலையை சந்தித்துப் பேசியதோடு அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தனது விடா முயற்சியாலும், நியூஸ் 7 தமிழின் உதவியாலும் ராகுல்காந்தியை சந்தித்த பேராசிரியர் அண்ணாமலை மகிழ்ச்சியில் திளைத்தார்.







