“ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கிறார்” –  அமித்ஷா விமர்சனம்!

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.

காரைக்கால் சந்தைதிடலில் நடைபெறும் நல்லாட்சி தொடரட்டும் புதுவை மலரட்டும், பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “2019 ல் நம்முடைய 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். புல்வாமா தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தினோம்.

பாரத பிரதமர் வளமான பாரதத்தை மட்டுமல்ல வளமான பாதுகாப்பையும் வழங்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை நாம் நம்முடைய கூட்டணி கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு என்ஆர் காங்கிரஸ், அஇஅதிமுக இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 60% வாக்குகளை பெறுவோம். நாம் 24 தொகுதிகளையும் வெல்வோம். நாராயணசாமி மிக மோசமான ஆட்சியை இந்த புதுச்சேரிக்கு வழங்கி இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரியில் சீர்கேடு நிறைந்து இருந்தது.

கடந்த ஐந்தாண்டுகளில் நாம் சட்டம் ஒழுங்கையும் சீர் செய்திருக்கின்றோம். அமைப்புகளையும் மறு கட்டமைப்பு செய்துள்ளோம். அடுத்ததாக நாம் வளர்ச்சி பயணத்திலே அடுத்த 5 ஆண்டுகள் புதுச்சேரி முன்னேறும். புதுச்சேரி மீனவர்களை உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் பணியை இந்த அரசு செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப மையம், தரவுகள் மையம், டேட்டா சென்டர் ஆகியவற்றின் மைய தளமாக புதுச்சேரி மாற்ற வேண்டும் என இளைஞர்களை நான் மனதிலே கொண்டு கூறுகிறேன்.

டெல்லி கஜானாவை நிரப்புவது ஒன்றே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பணியாக வைத்திருந்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை சிபிஐ விசாரித்து வருகிறது. சிஏஜி அமைப்பின் மூலமாக இங்கே வளர்ச்சி திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட 15,000 கோடி ரூபாய் அதற்கான புலன் விசாரணையும் தொடங்கி இருக்கிறது. அந்த 15,000 கோடி ரூபாய் வைத்து புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டு வந்திருக்கலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் செயலிலும் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மெய்பொருள் நிறுவனம், லேப்டாப் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது உலகின் 70 நாடுகளுக்கு சென்றடைய உள்ளது. ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கின்றார். ஐரோப்பிய யூனியுடன் இங்கிலாந்து நாட்டில் செய்து கொண்டிருக்கின்ற வர்த்தக ஒப்பந்தத்தால் நாம் நம்முடைய மீனவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு ஆதாயங்கள் தான் அதிகரிக்கும். எந்த தீங்கும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.