பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே. 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி தெலங்கானாவில் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் அம்பானி-அதானி, அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர்கள் இருவரையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். தெலங்கானா பொதுமக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பெற்றார்கள்? கறுப்புப் பணம் எவ்வளவு பெறப்பட்டது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இச்சம்பவத்தை ED, CBI ஐ வைத்து விசாரணை நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்ததாவது,
“பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். பிரதமரிடமிருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.
சிபிஐ அல்லது ஈடி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது, கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் ஏன் அமைதியாக இருந்தார்? விசாரணைக்கான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் ஆபத்தமானது.”
இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Mr Rahul Gandhi is absolutely correct in demanding an enquiry into the Hon'ble Prime Minister's allegation
The Hon'ble Prime Minister had made a very serious allegation: that two prominent industrialists have tempo-filling quantities of cash and they were delivered to the…
— P. Chidambaram (@PChidambaram_IN) May 10, 2024








