ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் முதல் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது வரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று, அகில…

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் முதல் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது வரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று, அகில இந்திய காங்கிரஸ். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை பெற்றிருந்தது காங்கிரஸ். இந்திய விடுதலை இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றது. பல்வேறு தேசிய தலைவர்கள் வழிநடத்தி வந்த காங்கிரஸ் கட்சியை 2017 ஆம் ஆண்டு கையில் எடுத்தார் ராகுல் காந்தி.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியதால், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் ராகுல் காந்தி கட்சிப் பணியாற்றினார்.

இதையும் படியுங்கள் : நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் – முழு லிஸ்ட் இதோ!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் வெற்றிக் கனியை ருசித்திருந்தாலும், இந்திய அளவில் அந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பெரும்பான்மை இடங்களில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்த தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மீண்டும் சோனியா காந்தி, தலைவராக பதவியேற்றார்.

2019 தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும் ’பாரத் ஜோடோ யாத்திரா’ எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். இந்தியாவில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்னைகளை நேரடியாக கேட்டறியும் வகையில், இந்த நடைபயணம் அமைந்தது.

ராகுல் காந்தி மேற்கொண்டு வந்த இந்த நடைபயணத்தின்போதே, காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக இருந்த சோனியா காந்தி, அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்களாக சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். பின் காங்கிரஸ் தலைவராகவும் பதவியேற்றார்.

தமிழ்நாட்டில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், என பல்வேறு மாநிலங்களில் கால்பதித்து இறுதியாக காஷ்மீரில் இந்தாண்டு ஜனவரி 29 ஆம் தேதி நிறைவு பெற்றது. நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல், கூடுதல் ஆதரவை திரட்டித் தந்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதையடுத்து ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மக்களிடம் கேட்டறிந்தவற்றையும், நாட்டில் நிலவும் பிரச்னைகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். மத்திய அரசை கடுமையாக சாடினார். எதிர்க்கட்சிகளின் அமளியோடு இந்த முதல் அமர்வு நிறைவுபெற்றது.

இந்த கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக எம்.பி.க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று ராகுல் காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்தது. அதனடிப்படையில் , பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை தருமா? அல்லது அதற்கு மாறாக ஆதரவைப் பெருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….

– ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.