சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்குள்ள காங்கயம் மாடுகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பார்வையிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SKCRF அறக்கட்டளையின் அறங்காவலர் அரவிந்த் நல்லதம்பி, அவரை வரவேற்று காங்கயம் கால்நடை, கொரங்காடு, இயற்கை விவசாயம், மற்றும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
மையத்தில் அமையப் பெற்றுள்ள சிறு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தையும் பார்வையிட்டார். மையத்தின் அருகே அமைந்துள்ள மேய்ச்சல் நிலமான கொரங்காட்டிற்கு சென்று அங்கு உள்ள காங்கயம் மாடுகள் மற்றும் காளையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, காங்கயம் கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் மீது கொண்ட ஆர்வத்தில் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் (SKCRF) 2009-ஆம் ஆண்டு தொடங்கி உள்ளதை குறித்து கேட்டறிந்தார்.
இவ் மையம் முதல் அகவிடப் பாதுகாப்பு (In-situ) முறையில் காங்கயம் கால்நடை பாதுகாப்பிற்கான பணிகள், வள மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்குவது குறித்தும், நாட்டின மாடுகள் வளர்ப்பு அதையொட்டிய வேளாண்மை , பாரம்பரிய அறிவு , உயிரிய பண்பாடு மரபுகள் (Bio cultural values ), நீர் ஆதாரங்கள் மேம்பாடு, மழை நீர் சேகரிப்பு குட்டை அமைத்தல் , குறுங் காடுகள் வளர்ப்பு, மரம் நடுதல், எனச் சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை பராமரிப்பால் இயங்கி வரும் அமைப்பு ஆகும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-இரா.நம்பிராஜன்








