மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய ஆர். மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக மருத்துவர் ஆர். மகேந்திரன் நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகியவற்றில் மநீவில் இருந்து பணியாற்றினார். இவருடைய அறிவுரையின் படியே கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாக கூறப்பட்டது. அங்கு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரனும் கணிசமாக வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர், கமல்ஹாசன் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி மநீம துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகினார் மகேந்திரன். மேலும் அவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திமுகவில் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 78 பேர் மட்டுமே நேரில் வந்து கட்சியில் இணையவுள்ளதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் இணையவுள்ள 11000 பேரின் முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக, தேமுதிக மநீம என பல்வேறு கட்சிகளிலிருந்து தொண்டர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.









