பங்களாதேஷில் உலகின் மிகச் சிறிய பசுவை பார்ப்பதற்காக கொரோனாவை கண்டுகொள்ளாமல் ஏராளமானோர் பார்த்துச் செல்கின்றனர்.
உலகம் முழுவதும் மக்களை வாட்டும் கொரோனா, பங்களாதேஷிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. ஊரடங்கு விதிக்கப்பட்டு பொது போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், டாக்கா அருகில் உள்ள சாரிகிராம் என்ற பகுதி, அங்கு திடீர் பரபரப்பாகி இருக்கிறது. அந்தப் பகுதியை சேர்ந்த ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். அங்குள்ள பசு ஒன்று கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. அந்தக் கன்று குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவே இல்லை. ராணி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பசு, 51 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோ எடையை கொண்டிருக்கிறது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என்கிறார்கள் இந்த பசுவின் உரிமையாளர்கள்.
கேரளாவைச் சேர்ந்த மணிக்கியாம் என்ற பசு, உலகிலேயே சிறிய பசு என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் உயரம் 61 செ.மீ. இந்த ராணி, அதை விட 10 செ.மீ குறைவு என்கிறார்கள். இதையடுத்து உள்ளூர் சேனல்கள் மற்றும் பத்திரிகைகளில் இந்த ராணி பற்றி செய்தி வெளியானதை அடுத்து பரபரப்பாகி விட்டது இந்த ஏரியா.
ஷிகோர் ஆக்ரோ பார்ம் நிறுவனத்தின் மானேஜர் ஹசன் ஹவ்லேடர் என்பவர் அடிக்கடி அந்தப் பசுவை அளந்து பார்த்து வருகிறார். அவர் கூறும்போது, ‘கொரோனா லாக்டவுன் இருந்தாலும் நீண்ட தூரத்தில் இருந்தெல்லாம் இந்தப் பசுவை பார்க்க வருகிறார்கள். பலர் இந்த கன்றுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு இந்த கன்று குறித்து தெரிவித்துள்ளோம். மூன்று மாதங்களில் அவர்கள் வந்து பார்ப்பதாகக் கூறியுள்ளனர். வெறும் 3 நாட்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் இந்த ’ராணி’யை பார்த்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement: