க்யூ நெட் தங்கக் காசு மோசடி விவகாரத்தில் இரண்டு நாள் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் விசாரணை நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கியூ நெட் நிறுவனமானது,
விகான் டைரக்ட் செல்லிங் என்ற நிறுவனம் மூலமாக இந்தியாவில் பொதுமக்களிடம்
முதலீட்டை ஈர்த்தது. முதலீடு செய்தவர்களுக்கு தங்க காசாக வழங்கப்படும் என
பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. எம் எல் எம் என்ற முறைப்படி
நாடு முழுவதும் 5 லட்சம் பேரிடம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக
புகார்கள் குவிந்தன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 20,000 மேற்பட்டோர் முதலீடு செய்து
ஆயிரம் கோடிக்கு மேல் ஏமாந்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மும்பை
சைபராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

சென்னையில் சேத்துப்பட்டு போலீசார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்து பின்பு
வழக்கின் தன்மை காரணமாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்புடைய ஏழு பேர் கைது
செய்யப்பட்டனர்.
இந்த இந்த மோசடியில் தொடர்புடைய விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்தின்
நிர்வாகி மைக்கேல் பாரேரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்ற மாநில
விசாரணை அமைப்புகள் மூலம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அமலாக்க துறையினர் கடந்து 2014 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து
விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதற்கட்டமாக 150
கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினர்

தொடர்ந்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்
பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம்
சொத்துக்களாகவும் முதலீடுகளாகவும் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் நேற்றும் இன்றும் சென்னை பெங்களூர் மும்பை உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்தில் நேரடியாக தொடர்புடைய
பங்குதாரர்கள் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனைகளை
மேற்கொண்டனர்.
அந்த அடிப்படையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பெண் தொழிலதிபர் பத்மா
வீராசாமி வீட்டில் இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது. பெண் தொழிலதிபர் பத்மா
கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டு அவருடைய 190
கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அவர் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் மற்றும் விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனம் தொடர்பான மற்ற நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் உள்ளிட்டோரின் 36 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த 36 வங்கி கணக்குகளில் சுமார் 90 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக
அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வங்கிக் கணக்குகளில்
உள்ள தொகைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது. இதேபோன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு
முதலீடுகள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்தும்
தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர் விசாரணையில் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்
பணத்தை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் குறித்து தெரியவரும் எனவும்
அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







