தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் கம்மமில், அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக குறுக்கீடுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் மோடி கவலை கொள்வதில்லை என்றும் மாறாய் பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்ப்பதிலேயே அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.







