மலேசியாவில் கழிவறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரை மலைப் பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் இளைஞர் சப்ரி தசாலி (28). இவர் கழிவறையைப் பயன்படுத்தும்போதெல்லாம் மொபைல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். மார்ச் 28ஆம் தேதியன்று கவிவறையில் வீடியோ கேம் விளையாடியுள்ளார். அப்போது, மலைப்பாம்பு ஒன்று கடிப்பதையறிந்த தசாலி கழிவறையைவிட்டு வெளியே ஓடியுள்ளார். பாம்பைப் பிடித்து இழுத்து வீசியுள்ளார். இதுகுறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.
மலைப்பாம்பு விஷம் இல்லாதது என்று தெரிந்த பின்புதான் அவர் நிம்மதியடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற தசாலிக்கு டெட்டனஸ் எதிர்ப்பு ஊசி போடப்பட்டுள்ளது. 40 வருடங்களாக தனது குடும்பம் வசித்து வரும் பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்று தசாலி கூறினார்.
இந்நிலையில், பாம்பு கடித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது பின்பக்கத்தில் பாம்பின் பற்களின் துண்டுகளை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். “நான் பாம்பை பலமாக பிடித்து இழுத்ததால் பற்கள் உடைந்திருக்கலாம்” என்று மலேசிய ஊடகத்திடம் தசாலி கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தசாலி, “இந்த சம்பவம் என் வாழ்வின் ஒரு துரதிர்ஷ்டவசமான தருணம். இது மார்ச் மாதம் நடந்தது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலும், அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல தற்போது தான் மீண்டு வருகிறேன். சுமார் இரண்டு வாரங்கள் என் வீட்டில் கழிப்பறையைப் பயன்படுத்தவில்லை. உள்ளூர் மசூதியின் கழிப்பறையைப் பயன்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.









