மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான வேட்புமனு நேற்று முதல் தொடங்கிய நிலையில், 3ஆம் தேதி முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.திமுக, தனக்கான 4 இடங்களில் 3 இடங்களில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். 3 இடங்களில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்கள் பெயரை அதிமுக தலைமை தற்போது அறிவித்துள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சிவி சண்முகம் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர். தர்மர் ஆகிய 2 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, நியூஸ்7 தமிழ் கருத்துக் கணிப்பில் கூட அதிமுக சார்பில் சிவி சண்முகத்தின் பெயர் தர்மர் ஆகியோர் பெயர்கள் அதிமுகவில் பரிசீலிப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனவே ஜெயக்குமார் மற்றும் சிவ சண்முகம் ஆகியோர் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
தென்மாவட்ட பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியதால், அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலோசனை குழு முடிவு அடிப்படையில் சிவி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.