கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமம், இந்த மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு
அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப்
பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.

இந்த கோயிலின் வைகாசித் திருவிழா காப்புக் கட்டுதல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் உடன் தொடங்க உள்ள நிலையில், இன்று அம்மனுக்கு
பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பல்வேறு கிராமத்தில் இருந்து வந்த பெண்கள் தலையில் மல்லி, முல்லை, ரோஜா அம்மனுக்கு உகந்த வேப்பிலை உள்ளிட்டவற்றை தட்டுகளில் எடுத்து கொண்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!
கொத்தமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து திரளான பெண்கள் கோயில் வரை
தலையில் பூத்தட்டுகளை சுமந்தவாறு ஊர்வலமாக வந்து கோயிலைச் சுற்றி வழிபட்டு
வந்தனர். இதனையடுத்து அம்மனுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பூக்களைக்
கொட்டி அம்மனை வழிபட்டனர். பூச்சொரிதல் விழாவை ஒட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கீரமங்கலம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கோண்டனர்.








