புதுச்சேரி மாநிலத்தில் 5000 இளைஞர்களுக்கு வேலை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய காவலர்கள் பணிக்கு திரும்பும் விழாவில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கடந்த
2022ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் 131 பெண் காவலர்கள், 252 ஆண் என
மொத்தம் 383 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஓர் ஆண்டு
கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி காவல் துறையின் 25 வது அணியில் பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து
383 காவலர்கள் பணிக்கு திரும்பும் விழா கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டி.ஜி.பி மனோஜ் குமார் லால் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது: புதுச்சேரியில் காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பாமல் இருந்து வந்தது. நாங்கள் பொறுப்பேற்ற பின்பு, அதை நிரப்புவோம் என வாக்குறுதி கொடுத்தோம்; தற்போது வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.
தகுதி உள்ளவர்களுக்கு அனைத்து துறைகளிலும் அரசு வேலை வழங்கி வருகிறது என்றும் படித்த இளைஞர்களுக்கு உடனடி வேலை வழங்க அரசு உறுதியாக உள்ளதாகவும், புதிதாக தேர்வான காவலர்கள் மக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் புதுச்சேரி மாநிலத்தில் 5,000 இளைஞர்களுக்கு வேலை கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.








