தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என அமித்ஷா கூறியிருந்த நிலையில், இல.கணேசனை வேண்டுமானால் பிரதமர் ஆக்குங்களேன் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் இன்று தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சென்னையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷா வருகையின்போது சென்னை விமான நிலையப் பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மழை மற்றும் காற்று காரணமாக மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அமித்ஷாவை, பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.
திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆற்காடு நவாப் முகம்மது அப்துல் அலி, நவாப் சதா முகமது ஆசிப் அலி, திரைப்பட தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், ஐசரி கணேஷ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
தொழிலதிபர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், செட்டிநாடு சிமெண்ட்ஸ் முத்தையா, நல்லி குப்புசாமி, பிரிதா ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட 24 முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் கட்சியினரிடையே பேசிய அமித்ஷா “ தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கு முன் காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேரை பிரதமராமாக வந்திருக்க வேண்டியவர்கள். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்கள் தவறவிட்டுள்ளோம். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். இரண்டு முறை தமிழர்கள் பிரதமர்களாக வருவததை தவறவிட்டதற்கு காரணம் திமுகதான்.” என பேசியதாக தகவல்கள் வெளியாகியது.
அமித்ஷாவின் இந்த கருத்து தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக பிரத்யேகமாக பேட்டியளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ”பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்ததோடு தற்போது நாகாலாந்த் ஆளுநராகவும் பதவி வகிக்கும் இல.கணேசனை பிரதமர் ஆக்குங்கள்” என பதில் அளித்துள்ளார். அதோடு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால் தற்போதுகூட இல.கணேசனை மாநிலங்களவை உறுப்பினராக்கி பிரதமராக்கலாம் யார் தடுத்தது எனவும் வினவினார். ”ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்றெல்லாம் பேசியவர் அமித்ஷா” எனக்கூறிய டி.கே.எஸ்.இளங்கோவன், தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்வதற்காக இப்படியெல்லாம் அமித்ஷா பேசுவதாக குற்றம் சாட்டினார்.







