11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்து வைக்க கிடங்குகள் உள்ளதால், திறந்தவெளியில் அவற்றை வைக்க வேண்டிய தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், பொது விநியோகத்திட்ட கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொது விநியோகத்திட்ட கடைகளை ஆய்வு செய்யும்போது, விற்பனை இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்யும் நிலை உள்ளது. அதனை தவிர்க்கும் வகையில், அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை உடனடியாக அறிய முடியும். ஆய்வில் அலுவலர்கள் ஈடுபடுவதை செயலி மூலம் அரசால் கண்காணிக்க இயலும் அலுவலர்கள் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டிய கடைகள் குறித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2,16,000 மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் 98.3 சதவிகிதம் பயோ மெட்ரிக் முறை பயன்பாட்டில் உள்ளது. நெல் கொள்முதல் 90-95% டெல்டா மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது. விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு இல்லாத வகையில் நெல் கொள்முதல் நிறைவடைந்துள்ளது.
11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்து வைக்க கிடங்குகள் உள்ளன. ஆகவே விவசாயிகள் திறந்தவெளியில் நெல்லை கொள்முதல் செய்து வைக்க வேண்டிய தேவையில்லை. அனைத்து கிடங்குகளிலும் கேமராக்கள் பொருத்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
நியாயவிலைக்கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2,405 நியாய விலைக் கடைகளில் வண்ணம் தீட்டப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான கட்டமைப்புகள் கொண்டு வரப்படும். நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிதி நிலைமைக்கேற்ப முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
22% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கேட்டோம். அவர்கள் 19% கொடுத்துள்ளார்கள். தேவைப்பட்டால் புதுடெல்லி சென்று வலியுறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.







