சர்க்கரை நோயாளிகள் பேலியோ டயட் என்ற சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ளவே கூடாது என மூத்த உணவியல் நிபுணர் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் ஒருவரின் மனைவிக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த paleo diet மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் கோமா நிலைக்கு சென்று சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சீனியர் உணவியல் நிபுணர் ரேஷ்மா கூறும் போது, “உடல்பருமனாக இருக்கும் நபர்கள், தங்களது உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் என்னும் சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர். அதில் ஒரு வகையே பேலியோ டயட் (Paleo diet). குறிப்பாக வயதானவர்கள் உடல் பருமனை குறைப்பதற்கு இந்த வகையை மேற்கொள்கின்றனர். இந்த முறையில் சிக்கன், முட்டை என உணவு வகைகள் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
சர்க்கரை நோயாளிகள் இந்த வகை டயட் முறைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்திய அவர், “சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்கள் அறிவுரைப்படியே உடல் குறைப்பு டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே அனைத்து நபர்களும் உடலை குறைக்க விரும்பினால் மருத்துவர்களை அணுகி முறையான பயிற்சி அடிப்படையிலேயே டயட் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். 
மேலும், “இணைய தளம் மூலமாக அல்லது வேறு நபர் எடுத்துக் கொள்ளும் டயட் சிகிச்சைகளை நாமும் பின்பற்றக் கூடாது. ஒவ்வொருவருக்கு அவரவர் உடலை பொருட்டு டயட் சிகிச்சை மாறுபடும்” என்றார்.







