ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது அவரோடு நடந்து சென்ற பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தொகுதி எம்.பி யான சந்தோக் சிங் சௌத்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில ஜலந்தர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சௌத்ரியும் நடை பயணத்தை தொடங்கினார்.
அப்போது நடந்து கொண்டிருக்கும் போதே சந்தோக் சிங் சௌத்ரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை பக்வாரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
சந்தோக் சிங் சௌத்ரியின் திடீர் மரணத்தை கண்டு காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். முன் அறிவிப்பு இல்லாமல் இந்திய ஒற்றுமை பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“சந்தோக் சிங் சௌத்ரியின் திடீர் மரணத்தை கண்டு நான் அதிர்ச்சியில் உள்ளேன். அவரது மரணம் காங்கிரசு கட்சிக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மன் தனது டிவிட்டர் பக்கத்தில் “சந்தோக் சிங் சௌத்ரியின் திடீர் மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.







