பொன்னமராவதியில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய நபர்களை கைது செய்து, அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசாரை பாராட்டிடும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஊக்கமூட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாக திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை
பயன்படுத்தி திருடர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிச் செல்வதாக புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் வகையில் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் தனிப்படை அமைத்து திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் இரவு,பகலாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் பொன்னமராவதில் சமீபத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குபின்னாக முரணாக பதிலளித்தனர்.
இதனால் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் வாகன திருட்டில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புகொண்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் பைக் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை பாராட்டும் வகையில் பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
—வேந்தன்







