பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம்…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் குளிர்பானங்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.பல பகுதிகளில் அதிகளவு விற்பனையின் காரணமாக பழங்களை செயற்கையாக பழுக்க செய்து விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் பழக்கடைகளில் நேற்று திடீரென மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சோதனை செய்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பிரவீன்குமார்,பொன்னமராவதி அலுவலர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நகரிலுள்ள பல கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.அப்போது பேருந்து நிலையம் அருகிலுள்ள இரு கடைகளில் செயற்கையாக கார்பெட் கல் வைத்து சுமார் 860 கிலோ அளவிலான பழங்களை பழுக்க வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தினர்.

மேலும் அக்கடைகளில் இருந்து மாதிரி பழங்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.விளக்கம் கேட்டு அக்கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.