“மருத்துவ சுற்றுலாவின் முக்கிய தளமாக புதுச்சேரி மாறியுள்ளது” – பிரதமர் நரேந்திர மோடி!

புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி,

“சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். பாரதியார் விடுதலைப் போராட்ட பெருநெருப்பை பற்ற வைத்தது புதுச்சேரியில் தான். இதற்கு முன் நான் இங்கு வந்த போது பெஸ்ட் புதுச்சேரி என்று கூறியிருந்தேன். இப்போது மிக சிறப்பாக புதுச்சேரி வளர்ந்து உள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.

புதிய திட்டங்கள் மூலம் புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் கிடைக்கும். இதுவரை மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட மூலதன முதலீட்டு நிதி, யூனியன் பிரதேசமான புதுவைக்கும் தரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உயர்தரமான உட்கட்டமைப்பை கொண்டு வர அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களால் புதுச்சேரி மக்களின் வாழ்க்கை தரம் உயரும், கட்டுமானங்கள் அதிகரிக்கும். கடந்த முறை வந்த போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நான்கரை ஆண்டுகாலம் பல திட்டங்கள் நிறைவேற்றம். மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டால் எப்படி வளர்ச்சி அடையும் என்பதற்கு உதாரணம் புதுச்சேரி மாநிலம் தான். புதுச்சேரியில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. புதுச்சேரியின் உட்கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. புதுச்சேரி போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் மின்சார பேருந்து முக்கியம். மருத்துவ சுற்றுலாவின் முக்கிய தளமாக புதுச்சேரி மாறி உள்ளது. மக்கள் நலமாக இருந்தால் தான் ஒர நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். புதுச்சேரியை சேர்ந்த யாரும் மருத்துவத்திற்காக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரக்கூடாது. மருத்துவம் என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டிய ஒன்று. புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.