இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி…? – ஒரு மினி ரிவ்யூ….!

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…………!

கோலிவுட்டில் இந்த வாரம் ராதிகாவின் ’தாய்கிழவி’, சரத்குமாரின் ’ஆழி’, ஆரியின் ’போர்த் புளோர்’  ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமுத்திரக்கனியின் ’தடயம்’ வெப்சீரியஸும்  வெளியாகியுள்ளது. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக……!

தாய்கிழவி

மதுரை கிராமத்தில் வசித்து வரும் பவுனுதாய் என்ற ராதிகாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அவர் சேர்த்து வைத்திருக்கும் 160 பவுன் நகையை தங்கள் வசமாக்க, 3 மகன்கள், மருமகன் ஆகியோர் என்ன செய்கிறார்கள்….? ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராதிகா உயிர் பிழைத்தாரா…? அந்த நகை அவர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்ததா…? என்பதை கிராமத்து பின்னணியில் காமெடி, எமோஷன் கலந்து பெண்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்தும் படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.

பவுனுதாய் என்கிற கேரக்டராகவே ராதிகா வாழ்ந்து இருக்கிறார். முதலில் கிண்டல், நக்கல், குறும்புத்தனமான வெளிப்படும அவரது கதாபாத்திரமானது, பின்னர் இன்னொரு மேனரிசத்தில் பல கருத்துகளையும் சொல்கிறார். அவர் வட்டி வாங்க வரும்போது ஊரே பார்த்து பயப்படுகிறது. மருமகன், மருமகள் உட்பட அனைவரையும் மிரட்டுகிறார். மகள் மீது பாசமாக இருக்கிறார். கெட்அப், மேக்கப், நடை, உடை, நடிப்பு அனைத்திலும் சிறப்பான முத்திரையை பதித்து இருக்கிறார். அவருக்கு பல விருதுகள் நிச்சயம்.

தமிழ்சினிமாவில் இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க ராதிகாவை விட்டால் வேறு ஆட்கள் இல்லை எனலாம். ஒரு கட்டத்தில் தான் ஏன் இப்படி கறாராக இருக்கிறேன். தனது உழைப்பு, சேமிப்பு பழக்கத்தால் வாழ்க்கையில் என்ன நடந்தது. பெண்கள் கல்வி கற்க வேண்டும். சொந்தகாலில் நிற்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று அவர் சொல்லும் அட்வைஸ் ‘அட, இது நமக்கானது’ என்று பல பெண்களின் மனதில் பதிவது நிச்சயம். கணவன் துன்புறுத்தினால், வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினால் அவனுக்கு அடங்கி போக வேண்டாம். பெண்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து முடிவெடுக்க உரிமை இருக்கிறது. மறுமணம் செய்யலாம் என்ற கருத்தையும் தனது மகள் மூலம் சொல்லும் இடங்களில் தியேட்டரே அதிர்கிறது. இயக்குனரின் பெண்ணீய சிந்தனை, பெண்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனை பாராட்டுக்கு உரியது.

ராதிகாவின் மகன்களாக வரும் அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோரும், மதுரை கிராமத்து மனிதர்களும் படத்துக்கு பெரிய பிளஸ். ஆட்டோகாரராக, கஞ்சனாக அருள்தாசும், கமல்ஹாசன் ரசிகராக, மைக் செட்டுக்காரரான சிங்கம்புலியும், பூ கட்டுபவராக பாலசரவணனும் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே கமல்ஹாசன் பாடல் வரும் சீன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று. ஆம்புலன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு சீனில் உருக்கமாக நடிப்பை தந்து இருக்கிறார் பாலசரவணன். மருமகள்களாக நடித்துள்ள 3பேரும், மருமகனாக வரும் முத்துக்குமாரும் தங்களுக்கான ஏரியாவில் புகுந்து அடித்து இருக்கிறார்கள். பென்னிகுயிக் என்ற கேரக்டரில் வருகிறரா் முனிஸ்காந்த் மனதில் நிற்கிறது. அவர் சம்பந்தப்பட்ட சீன்களில் காமெடியும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

குறிப்பாக, ராதிகா மகளாக வரும் ரேச்சல் அமைதியான நடிப்பில் கவர்கிறார். நான் ஏன் தையல் கற்றேன் என்று அவர் சொல்லும் காட்சி, செம கைதட்டல். அது பெண்களுக்கான தன்னம்பிக்கை சீன். இவர்களை தவிர, டாக்டர், போலி பூசாரி, கிராமத்து மக்கள் ஆகியோர் சிறப்பான தேர்வுகள். நிவாஸ் கே பிரசன்னா இசையும், பாடல்களும் படத்துக்கு உயிர் கொடுத்து இருக்கின்றன.

படம் முழுக்க கிண்டல், நக்கல் டோனில் வரும் வசனங்கள், மதுரைக்கே உரிய குசும்பு சீன்கள், ராதிகாவின் நடிப்பு, அவர் சொல்லும் கருத்துகள் படத்துக்கு பெரிய பிளஸ். ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து இருந்தாலும் படம் போரடிக்கவில்லை. எங்கேயும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. கிளைமாக்சில் பெண்கள் முன்னேற்றம் குறித்து, பெண்களின் பவர் குறித்து, கடமைகள் குறித்து பேசும் வசனங்கள் படத்தின் மேசேஜ் ஆக அமைந்து படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றன. இந்த ஆண்டின் சிறந்த படங்களின் ஒன்றாக தாய்கிழவி அமையும்.

ஆழி

மாதவ் ராமதாஸன் இயக்கத்தில் சரத்குமார், இந்திரஜித், தேவிகாசதீஷ் நடித்துள்ள மாறுப்பட்ட படம் ’ஆழி’. ஆம், படத்தின் பெரும்பகுதி நடுக்கடலில் ஒரு மீன்பிடி படகில்தான் நடக்கிறது. அதில் சரத்குமாரும், இந்திரஜித்தும் மோதிக்கொள்கிறார்கள், அவர்கள் ஏன் மோதுகிறார்கள். என்ன பிரச்னை? கடைசியில் யார் உயிர்பிழைத்தார்கள் என்பதே கதை.

சரத்குமார் மகள் தேவிகா சதீசை காதலிக்கிறார் கல்லுாரி மாணவரான இந்திரஜித். அதை விரும்பாத சரத்குமார், அவரை கடத்தில் தனது மீன்பிடி போட்டில் வைத்து டார்ச்சர் செய்கிறார். இருவரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டு உயிருக்காக போராடுகிறார்கள்.என்ன நடக்கிறது என்பதை மலையாள பாணியிலான படமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாதவ் ராமதாஸன். சரத்குமார் நடிப்பு, மகள் மீதான பாசம், சண்டைக்காட்சிகள் படத்தின் ஹைலைட். புதுமுகமாக இருந்தாலும் காதல், ஆக் ஷன் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் இந்திரஜித். தேவிகா சதீஷ் சில சீன்களில் அழகாக இருக்கிறார். படத்தின் பெரும்பகுதி நடுக்கடலில் போட்டில் நடப்பது புதுமை என்றாலும் பல நேரங்களில் போரடிக்கிறது.

சரத்குமார் கேரக்டர் பின்னணி சரியாக சொல்லப்படவில்லை. அவரை வில்லன் மாதிரி காண்பிப்பது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என இயக்குனர் யோசிக்கவில்லை. கிளைமாக்ஸ் ஏமாற்றம். ஆனாலும், இரண்டு கேரக்டருக்கு நடுவேயான பகை, சண்டை ஆகியவை விறுவிறுப்பாக இருக்கிறது. மகள் மீதான பாசத்தை சரத்குமார் சொல்லும் இடமும், தனது காதலி மீதான பாசத்தை இந்திரஜித் சொல்லும் இடமும் டச்சிங். படகு சம்பந்தப்பட்ட காட்சிகளில், அங்கு நடக்கும் சண்டைகாட்சிகளில் ஆனந்த் ஒளிப்பதிவு அபாரம். ஜாசி கிப்ட் இசை சுமார் ரகம். வையாபுரி, பிக்பாஸ் தாமரை ஆகியோர் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள். வழக்கமான காதல், ஆக்சன், காமெடி படம் விரும்பாதவர்களுக்கு ஆழி பிடிக்கும். கமர்ஷியல் படங்களை விரும்புகிறவர்களுக்கு ஏமாற்றமே

போர்த் புளோர்

எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி, பவித்ரா, தீப்ஷிகா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் ’போர்த் புளோர்’. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஆரி, ஒரு அபார்ட்மென்ட்டின் போர்த் புளோரில் தங்கியிருந்து, காணாமல் போன தனது காதலியை தேடுகிறார். அவரை சுற்றி அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. கனவில் பல விஷயங்கள் வந்து போகின்றன. அவர் பார்க்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் முன்பே கொல்லப்பட்டவர்கள் என்ற உண்மை அவருக்கு தெரியவர, அந்த அபார்ட்மெண்ட்டில் என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். அங்கே நடந்த மர்மம் என்ன? அவர் காதலி கிடைத்தாரா என்பதே கிளைமாக்ஸ்.

 

காதல், நில மோசடி, திரில்லர், பேய் என அனைத்து கலந்த கதையாக உருவாகி இருக்கிறது இப்படம். ஆரியை சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள், அதற்கான காரணங்கள், அதை தொடர்ந்து ஆரி செய்யும் விஷயங்கள் விறுவிறு. நில மோசடி குறித்த பல புதுதகவல்களை பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகள் சுமார் என்றாலும், அந்த அபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட மர்ம காட்சிகள், வில்லன் பேக்கிரவுண்ட், கிளைமாக்ஸ் ரசிக்கும்படி இருக்கிறது. ஓவர் ஆக்டிங் என்றாலும் தலைவாசல் விஜய் நடிப்பும், வில்லனாக வரும் இயக்குனர் சுப்ரமணிய சிவா நடிப்பும் நச்.

அபார்ட்மெண்ட்டில் நடக்கும் விஷயங்கள், நடந்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்கு பிளஸ். பணத்தாசை, அரசியல், நில பிரச்னைகளை ஒரு திரில்லர் பாணியில் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆரியின் நடிப்பும், அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளும் மனதில் நிற்கிறது. பேய் சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்னும் விரிவாக காண்பித்து இருந்தால் படம் இன்னும் பெரியளவில் பேசப்பட்டு இருக்கும்.

தடயம் (வெப்சீரிஸ்)

இந்த வாரம் சமுத்திரக்கனி, ஷிவதா நடிப்பில், நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தடயம்’ என்ற வெப்சீரியசும் ஜீ5தமிழில் வெளியாகியுள்ளது. கதைக்களம் 1999களில் நடக்கிறது. தமிழக, ஆந்திர எல்லையில் நடந்த ஒரு தம்பதியினர் கொலையை இன்ஸ்பெக்டர் ஷிவதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி ஆகியோர் விசாரிக்கிறார்கள். இதே பாணியில் 69க்கும் அதிகமாக கொலைகள் நடந்ததை கண்டு அவரகள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

நள்ளிரவில் கொலை நடக்கிறது. கொலைகளில் திருட்டு நடக்கவில்லை. ஆனால், ஆணின் அரைஞான்கயிறு, பெண்ணின் மாங்கல்யத்தை எடுத்து செல்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என துப்பறியும்போது வில்லன்கள் ராஜ், பிரேம் அவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி தெரிய வருகிறது. அவர்களை எப்படி கைது செய்கிறார்கள். இந்த கொலைகளுக்கான கொடூர பின்னணி என்ன? அவர்கள் யாரால் எப்படி பாதிக்கப்பட்டார்கள். கொலையாளிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதை 1999களில் நடந்த சில உண்மை சம்பவம் பின்னணியில் இதை கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

சமுத்திரக்கனி நடித்த முதல் வெப்சீரியஸ் இது. அவரின் கேரக்டர் முதலில் இருந்து கடைசிவரை பார்வையாளர்களை ஈர்க்கிறது. வில்லன்களும் பயத்தை ஏற்படுத்துகிறார்கள். கொலையாளிகளுக்கு இவ்வளவு சப்போர்ட் தேவையா என்ற கேள்வி எழுந்தாலும் சமுத்திரக்கனி, ஷிவதா, கொலையாளி ராஜ் நடிப்பும் கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறார். அடுத்தடுத்து கொலை சம்பவங்கள், விசாரணை, கொலை பின்னணி மிரட்டல். திரில்லர் பிரியர்களை தடயம் நிச்சயம் கவரும்.

சிறப்பு செய்தியாளர் :  மீனாட்சிசுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.