புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆதரவு எம்எல்ஏவுடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்து அரசியலை விட்டே விலகினார். இதேபோல காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமாரும் தமது எம்எல்ஏ பதவியை துறந்துள்ளார். ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் அடுத்தடுதத ராஜினாமாக்களால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் ஆளும் தகுதியை காங்கிரஸ் அரசு இழந்துவிட்டதாக தெரிவித்தார். முதலமைச்சர் நாராயணசாமி, தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வரவுள்ள நிலையில், புதுச்சேரி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி முதலமைச்சர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
இதனிடையே பெரும்பான்மை பலத்தை புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதைய சூழலில் காங்கிரஸுக்கு காங்கிரஸ் 10, திமுக 3, காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை 1 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சி வரிசையில் என்ஆர் காங்கிரஸ் – 7, அதிமுக – 4, நியமன உறுப்பினர்கள் – 3 என 14 பேர் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்து 4 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு பெயர் போன புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.